ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Wednesday, November 10, 2010

பள்ளிக்குழந்தைகளை கடத்திச் கொன்ற கொடூரன் சுட்டுக் கொலை

கோவை  : கோவையில், பள்ளிக்குழந்தைகள் இருவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' நேற்று சுட்டுக் கொல்லப்பட்டான். விசாரணைக்காக வேனில் அழைத்துச் சென்றபோது போலீசிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவன் சுட, பதிலுக்கு போலீஸ் அதிகாரிகள் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானான்.
கோவை, ரங்கேகவுடர் வீதி, காத்தான் செட்டி வீதியில் வசிப்பவர் ரஞ்சித்குமார்(40); துணிக்கடை உரிமையாளர். இவரது மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர், நகரிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கடந்த மாதம் 29ம் தேதி காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே காத்திருந்தனர். அப்போது, கால்டாக்சியில் வந்து இவ்விரு குழந்தைகளையும் உடுமலை அருகேயுள்ள தீபாலப்பட்டிக்கு கடத்திய நபர்கள், சிறுமி முஸ்கனை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின், குழந்தைகள் இருவரையும் அங்குள்ள பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர்.தமிழக மக்களை அதிரவைத்த இக்கொலை வழக்கில் பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் மோகன் (எ) மோகனகிருஷ்ணன்(37), இவனது கூட்டாளியான டிராக்டர் டிரைவர் மனோகரன்(23) ஆகியோரை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். நவ., 30க்குள் இவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் முனைப்பில் புலன்விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சமீபத்தில் குற்றவாளிகள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டியிருந்ததால், நான்கு நாள் "போலீஸ் கஸ்டடிக்கு' அனுமதி கோரி நேற்று முன்தினம்  கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மூன்று நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் கோபிநாத் அனுமதித்தார்.குற்றவாளிகள் மோகன் (எ) மோகனகிருஷ்ணன், மனோகரன் இருவரையும் நேற்று முன்தினம் இரவு கஸ்டடியில் எடுத்த மாநகர போலீசார், சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு இவர்களை நேரில் அழைத்துச் சென்று, "சம்பவம் நடந்தது எப்படி?' என, விசாரிக்க திட்டமிட்ட போலீசார், நேற்று அதிகாலை 5 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து உடுமலை நோக்கி அழைத்துச் சென்றனர்.மோகனகிருஷ்ணனை ஒரு வேனிலும், மனோகரனை மற்றொரு வேனிலும் அழைத்துச் சென்றனர். மோகனகிருஷ்ணன் இருந்த வேனில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்.ஐ.,க்கள் முத்துமாலை, ஜோதி இருந்தனர். மனோகரன் இருந்த வேனில், இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையிலான போலீசார் இருந்தனர்.

இவ்விரு வேனும் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற போது, ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால், மாற்றுப்பாதையான போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டில் அழைத்துச் சென்றனர். மனோகரன் இருந்த வேன் முன்னால் செல்ல, மோகனகிருஷ்ணன் இருந்த வேன் பின் சென்று கொண்டிருந்தது.அங்குள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கு அருகே சென்றபோது, மோகனகிருஷ்ணன் திடீரென எஸ்.ஐ., ஜோதியிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறித்து, வேன் டிரைவர் ஏட்டு அண்ணாதுரையை நோக்கி நீட்டி, "வேனை கேரளாவுக்கு ஓட்டிச்செல்...' என மிரட்ட,  உடனிருந்த அதிகாரிகள் திடுக்கிட்டனர்.

நிலைமையை சமாளிக்க எஸ்.ஐ., முத்துமாலை தனது கைத்துப்பாக்கியை எடுக்க முயன்ற போது, மோகனகிருஷ்ணன் சரமாரியாக சுட்டான். ஒரு குண்டு எஸ்.ஐ., முத்துமாலையின் வயிற்றிலும், மற்றொரு குண்டு ஜோதியின் இடது கையிலும் பாய்ந்தது. போலீசார் நிலைகுலைந்ததை தொடர்ந்து, அவன் தப்பியோட முயன்றான். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்.ஐ., முத்துமாலை ஆகியோர் சுதாரித்து துப்பாக்கியால் பதிலுக்கு சுட்டதில் மோகனகிருஷ்ணனின் நெற்றியில் இரு குண்டுகளும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். குண்டு பாய்ந்து காயமடைந்த எஸ்.ஐ.,கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர், கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு, சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். போலீசாரின் அதிரடியான இந்த, "என்கவுன்டர்' கோவை போலீசார் மற்றும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் நடவடிக்கையை பாராட்டும் விதமாக ரங்கேகவுடர் வீதி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ஜெயின் சமூகத்தினர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். அதே வேளையில், போலீஸ் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இரு பிரிவு வக்கீல்கள், கோர்ட் வளாகத்தில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்ப்பு தெரிவித்த வக்கீல்களுக்கு கண்டனம் தெரிவித்து, கோர்ட் முன் பொதுமக்கள் சிலரும் திரண்டு கோஷமிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மற்றொரு குற்றவாளியான மனோகரனிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

11 ஆண்டுக்கு பின் 2வது "என்கவுன்டர்' : கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் போது, திருமால் வீதியிலுள்ள தனியார் கட்டடத்தில் வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு அதிரடியாக நுழைந்து சோதனையிட முயன்ற போலீசார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன.எஸ்.ஐ., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும், உள்ளே பதுக்கி வைத்திருந்த குண்டுகள் வெடித்ததிலும் ஐந்து பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பின் 2001, ஆக., 29ல் ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டிலுள்ள தொழிலதிபர் வீட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நடந்தது.அவ்வீட்டில் இரவில் புகுந்து பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க, அப்போதைய எஸ்.ஐ., பாலமுருகன் (தற்போது இன்ஸ்பெக்டர்) துப்பாக்கியால் சுட்டார். இதில், கொள்ளையன் கண்ணப்பன் என்பவனது காலில் குண்டு பாய்ந்து, சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தான்.கடந்த 1998க்கு பின் கோவை நகரில் 11 ஆண்டுகளாக போலீஸ், "என்கவுன்டர்' நடக்கவில்லை. நீண்டகாலத்துக்கு பின் நேற்று நடந்த, "என்கவுன்டரில்', குழந்தைகள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகனகிருஷ்ணன் சுட்டு கொல்லப்பட்டுள்ளான்.

"என்கவுன்டர்' வழக்கு பதிவு : கொலை வழக்கு குற்றவாளி மோகனகிருஷ்ணன், "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாருடன் வேனை கடத்த முயன்றது, போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.போலீஸ் கஸ்டடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து, குற்றவாளி உயிரிழந்துள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மரணபீதியில் மனோகரன் : மோகனகிருஷ்ணன், "என்கவுன்டரில்' போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயம், அவனது கூட்டாளி மனோகரனுக்கு வெகுநேரம் வரை தெரியவில்லை. காரணம், முன்னதாக வேறு ஒரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டான். "என்கவுன்டர்' சம்பவத்துக்கு பின், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தான். போலீசார் பரபரப்புடன் இருப்பதை கண்ட மனோகரன், "என்ன நடந்தது?' என, அருகிலிருந்த அதிகாரிகளிடம் விசாரித்துள்ளான்.மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்ததும், மரணபீதியில் உறைந்து அப்படியே தரையில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதுள்ளான். துப்பாக்கியுடன் தன்னை சுற்றி நின்றிருந்த போலீசாரை பார்த்து அடிக்கடி கையெடுத்து கும்பிட்டவாறே இருந்ததாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரேதத்தை பெற மனைவி வருவாரா? போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொலை குற்றவாளி மோகனகிருஷ்ணனின் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கஸ்டடியில் இவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவனது மனைவி ஆரோக்கியமேரி கோவையில் இல்லை. கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, குழந்தையை சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அங்கு தனியாக வசிக்கும் அவர், கணவனின் உடலை வாங்க வருவாரா, என்பது தெரியவில்லை.

மேலும் இருவர் பிடிபடுவர்? பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை பிடிக்க தனிப்படை தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளது. குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு திட்டம் வகுத்துக் கொடுத்ததாக கூறப்படும், தற்போது தலைமறைவாக உள்ள மேலும் இரு டிரைவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடுகின்றனர். ஒரு சில நாட்களில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபாஷ் போலீஸ்! கொலை குற்றவாளி மோகனகிருஷ்ணன் துப்பாக்கியால் சுட்டதில், எஸ்.ஐ., முத்துமாலையின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதைதொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட அண்ணாதுரை மற்ற இரு அதிகாரிகளையும் காப்பாற்ற, தனது கைத்துப்பாக்கியால் மோகனகிருஷ்ணனை நோக்கி சுட்டுள்ளார். அவனது நெற்றியில் இரு குண்டுகள் பாய்ந்து பலியாகியுள்ளான். எஸ்.ஐ., முத்துமாலை, தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காவிடில், மற்ற இரு போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்கின்றனர், போலீசார்.கொலைக்குற்றவாளி மோகனகிருஷ்ணன் செட்டிபாளையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் மாலை வரை முகாமிட்டு, நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் வேனின் இருக்கைகளிலும், வெளிப் புறத்திலும் ரத்தம் வழிந்தோடி படிந்திருந்தது; மேற்கூரையில் குண்டு பாய்ந்ததற்கான துவாரங்கள் காணப் பட்டன. உடனடியாக அந்த வேன், கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும், போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட, தமிழக போலீஸ் உயரதிகாரிகள் விபரங்களை கேட்டறிந்தனர். பொதுமக்களும் போலீஸ் கமிஷனரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கோவை ஸ்டேட் பாங்க் ரோட்டிலிருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர்கள், கமிஷனருக்கு வாழ்த்து தெரிவிக்க "மலர் செண்டு'டன் கமிஷனர் அலுவலகத்துக்கு காலையில் வந்திருந்தனர்.

பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று மனோகரனிடம் ரகசிய விசாரணை : கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கோவை கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் மூன்று நாள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதையடுத்து, தனிப்படை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தனித்தனியாக விசாரிக்க அழைத்து சென்றனர். முக்கிய குற்றவாளி மோகனகிருஷ்ணன் போலீசாரை தாக்கி தப்பிச்செல்ல முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டான். இதையறிந்த தனிப்படை போலீசார் மனோகரனை, குழந்தைகளை கால்வாயில் தள்ளிய இடத்திற்கு அழைத்து செல்லாமல், பொள்ளாச்சி நகர போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். பொள்ளாச்சி போலீசாரை கூட அனுமதிக்காமல் தனி அறையில் ரகசிய விசாரணை செய்தனர். ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு, அறைக் கதவுகளை தனிப்படை போலீசார் திறந்தனர். அதன்பின், போலீஸ் ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு செல்ல அனுமதித்தனர். இந்த விஷயம் வெளியே கசிந்ததும், பொள்ளாச்சியில் இருந்து, கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மனோகரனை போலீசார் அழைத்து சென்றனர்.

என்கவுன்டரில் கொடூரன் பலி  நீதித்துறை விசாரணை  : கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வேன் டிரைவர் மோகனகிருஷ்ணனை போலீசார் விசாரணைக்காக நேற்று அதிகாலை அழைத்து சென்றபோது "என்கவுண்டரில்' சுட்டு கொல்லப்பட்டான். போத்தனூர் போலீஸ் எல்லைக்குள் நடந்த இச்சம்பவம் குறித்து கோவை ஜே.எம்.எண்:7 மாஜிஸ்திரேட் தெய்வம், கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் நேரடி சாட்சியாக சேர்க்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். என்கவுன்டர் மேற்கொண்ட அதிகாரி, உடன் இருந்தவர்கள், மோகனகிருஷ்ணனின் உறவினர்களிடம் விசாரிக்கப்பட்டனர். பிரேதத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்த இடங்கள், பிரேதத்தின் நிலை, துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் ஆகியன குறித்து போலீசாரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. விசாரணைக்குப் பின், மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கொலைகாரனின் "12 நாள் வாழ்க்கை!' அக்.,29: காலை 7.50 மணிக்கு பள்ளிக் குழந்தைகள் முஸ்கன்(11), ரித்திக்(8) கால்டாக்சியில் கடத்தல். அன்றிரவே, கொலைகாரன் மோகனகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
அக்.,30: உடுமலை அருகே வாய்காலில் சிறுமி முஸ்கன் உடல் மீட்பு; கொலைகார கூட்டாளி மனோகரனும் கைது.
நவ.,1: பல்லடம் அருகே வாய்காலில் சிறுவன் ரித்திக் உடல் மீட்பு
நவ.,3: கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பாட்டி கமலாபாய், கோவை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பின்போது கொலையாளிளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காட்டினார்.
நவ.,4: கொலையாளிகள் இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஆவேசமடைந்த மக்கள் முட்டை வீசி கோஷமிட்டனர்.
நவ.,8: கொலையாளிகளை போலீசார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் கஸ்டடியில் எடுத்துச் சென்றனர்.
நவ.,9: விசாரணைக்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்ட மோகனகிருஷ்ணன், போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோட முயற்சித்த போது அதிகாலை 5.30 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டான்.


குற்றவாளி மனோகரன் குடும்பம் ஊரை விட்டு காலி செய்ய வேண்டும்

* அங்கலக்குறிச்சி மக்கள் போர்க்கொடி

கோவை பள்ளி குழந்தைகளை இரக்கமின்றி கால்வாயில் தள்ளி கொலை செய்த மனோகரன் செத்தாலும் இந்த மண்ணுக்கு கொண்டு வரக்கூடாது, அவனது குடும்பம் ஊரை விட்டு காலி செய்ய வேண்டுமென்று குற்றவாளிகளின் சொந்த கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் கடந்த 29ம் தேதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கோவை கால் டாக்சி டிரைவர் மோகன்(33) என்கிற மோகனகிருஷ்ணன், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மனோகரன்(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்காக போலீஸ் கஸ்டடியில் வெளியில் வந்த மோகன்ராஜ், போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயன்றபோது "என்கவுண்டரில்' சுட்டு கொல்லப்பட்டான். குழந்தையை நாசம் செய்து கொலை செய்தவனை போலீசார் சுட்டு கொன்றதற்கு நன்றி தெரிவித்தும், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குற்றவாளிகளின் சொந்த ஊரான அங்கலக்குறிச்சியில் பொதுமக்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.

அங்கலக்குறிச்சியில் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பள்ளியில் அனுமதி பெற்று மாணவர்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினர். கோவை பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பஸ் ஸ்டாப்களில் பேனர் வைத்துள்ளனர்.

கிராம மக்களின் கருத்துகள் :

தனலட்சுமி (ஊராட்சி தலைவர்): அங்கலக்குறிச்சி கிராமம் மாநில அளவில் சிறப்பான கிராமம் என்று பெயர் வாங்கியது. ஆனால், கோவை பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த சம்பவத்தால் கிராமத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளை இரக்கமின்றி துடிக்கத்துடிக்க கால்வாய் தண்ணீரில் தள்ளி கொலை செய்த குற்றவாளிகள் இருவரும் இரண்டு நாட்கள் அங்கலக்குறிச்சியில் மனோகரன் வீட்டில் தங்கியுள்ளனர். அப்படிப்பட்டவன்களை தங்க வைத்த மனோகரனின் குடும்பத்தார் கிராமத்திலேயே இருக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

அதனால் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றோம். இறுதியாக மனோகரனின் வீட்டிற்கு சென்று ஊரை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். குழந்தைகளை கொன்ற குற்றவாளிகளில் ஒருவனை கடவுள் உடனடியாக தண்டித்து விட்டார். பெண் குழந்தைகளை நாசம் செய்ய ஐடியா கொடுத்த மனோகரனுக்கும் இதே மாதிரி தண்டனை கிடைக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளை பாழ்படுத்த நினைப்பவர்கள் திருந்துவார்கள்.

கண்ணியம்மாள் (பொதுமக்கள்): அங்கலக்குறிச்சியில் உள்ள மனோகரனின் குடும்பம் பூ வியாபாரம் செய்கிறது. பூ விற்க வரும் போது மனோகரன் அவனது அம்மாவுடன் தெருவுக்குள் வருவான். யாரிடமும் வெளிப்படையாக பேசமாட்டான். பள்ளி குழந்தையை கடத்தி பணம் சம்பாதிக்க நினைத்தவர்கள் பெண் குழந்தைகளை நாசப்படுத்தியுள்ளனர். அந்த குழந்தைகளின் குடும்பத்தார் முன்னிலையில் மனோகரனையும் தூக்கில் போட்டு கொல்ல வேண்டும். அப்போதுதான் குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும். எந்த விசாரணையும் செய்யாமல் தண்டிக்க வேண்டும்.

திருமூர்த்தி (பொதுமக்கள்): குழந்தைகளை கொலை செய்தவர்களை மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அவர்கள் செய்த பாவத்திற்கு ஒருவனுக்கு கடவுளே தண்டனை கொடுத்து விட்டார். அதே கதிதான் இன்னொருவருக்கும் ஏற்படும். குழந்தை இறந்த தகவலை கேட்டபோது எங்களது மனமே கனத்தது. குழந்தைகளை பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும். அந்த குழந்தைகளை கால்வாய் தண்ணீரில் தள்ளி கொன்ற போது எப்படி துடித்திருப்பார்கள். அதே நிலை மனோகரனுக்கும் ஏற்பட வேண்டும். ஈவு, இரக்கம் இல்லாத அவர்கள் இந்த உலகத்தில் வாழக்கூடாது.

புவனேந்திரன் (பொதுமக்கள்): குழந்தைகளை கொன்ற குற்றவாளி மனோகரனின் குடும்பம் அங்கலக்குறிச்சியில் இனிமேல் வசிக்கக்கூடாது. அதனால் அவர்களை கிராமத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என்று கூறி விட்டோம். அவன் செத்தாலும் இந்த மண்ணுக்கு கொண்டு வர விடமாட்டோம். சட்டப்படி மனோகரனுக்கும் கடவுளே தண்டனை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு, கிராம மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment