ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Wednesday, November 17, 2010

ஸ்பெக்ட்ரம் உண்மைகள் ஓர் அலசல்!! நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 02

ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் சம்பந்தேமேயில்லாமல் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டது என்று ஒரு சில ஊடகங்கள் சொல்வதைப் பார்த்தோம்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு பாமரனுக்கும் எழும் சில அடிப்படைக் கேள்விகளையும் அதற்கு ஊடகங்கள் தரும் பதில்களையும் கீழே காணலாம்:
1. ஏன் தொலைத் தொடர்பு சம்பந்தப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப வளமான ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கப் படாமல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்கப் பட்டன?
நியாயமான கேள்வி. இந்த நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரத்திற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. இருந்தாலும் இந்தக் கம்பெனிகளுக்கு அரசாங்கம் தனது அரிய வளம் ஒன்றை தானம் செய்தது போல 2001ல் நிர்ணயிக்கப் பட்ட விலைக்கு விற்றிருக்கிறது.

ஏன்?

ஏனென்றால் இந்த நிறுவனங்கள் எல்லாம் மந்திரி ராஜாவின் மற்றும் அவரது கட்சித் தலைவரின் உறவினர்களின் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லுகின்றன ஊடகங்கள்.  இதை பயனீர் பத்திரிக்கையும் (The Pioneer), அதன் பிறகு அரசு உளவு அமைப்பான சிபிஐயும் கண்டு பிடித்திருக்கின்றனர். ஆக ஆதாயம் இல்லாமல் ஆண்டிமுத்து ராஜா இந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்கவில்லை என்கின்றனர் இவர்கள்.

அவர்கள் கூற்றுப்படி, அரசு வளத்தைக் குறைந்த விலைக்கு தனக்கும் தனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். கடைத்தேங்காயை எடுத்துத் தனக்குத் தானே உடைத்துக் கொண்டிருக்கிறார்.

2. அப்படி இவரது பினாமி கம்பெனிகளுக்கு விற்றதால் இவருக்கு என்ன லாபம்?
நல்ல சந்தேகம்.

2001ல் முடிவு செய்யப் பட்ட விலையின் அடிப்படையிலேயேதான் ஸ்பெக்ட்ரம் விற்கப் பட வேண்டும் என்று இவர் பிடிவாதமாக பல எதிர்ப்புக்களையும் மீறி முடிவு செய்யும் பொழுதே மத்திய மந்திரி சபை சுதாரித்துக் கொண்டு இவரைக் கட்டுப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால், லேசான சில எதிர்ப்புக்களுடன் இவர் தொடர்ந்து தன் விற்பனையை மேற்கொள்கிறார்.

அப்படி மேற்கொள்ளும் பொழுது திட்டமிட்டு குறிப்பிட்ட சில கம்பெனிகளுக்கு மட்டுமே இந்த விற்பனையை செய்து முடித்து விடுகிறார். ஏனென்றால் இவர் விற்ற நிறுவனங்களுக்கும் இவருக்கும், இவரது கட்சித் தலைவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருக்கின்றன என்று ஊடகங்கள் சொல்லுகின்றன. அடிப்படையில் இவை யாவுமே இவரது மறைமுகமான நிறுவனங்களே அல்லது இவருக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே என்பதை சிபிஐ இப்பொழுது கண்டு பிடித்திருக்கிறது என்பதையும் இந்த ஊடகங்கள் மறக்காமல் சொல்லுகின்றன.

பண்டோராவின் பெட்டி போல ஆரம்பம் எது, முடிவு எது, குற்றம் செய்தவர்கள் யார் என்பவற்றைத் தெளிவாகச் சொல்ல முடியாதபடி வலைப் பின்னல்களாக மிகக் கச்சிதமாக இந்த ஊழல் நடந்திருக்கிறது.

இவர் உரிமைகளை விற்றதாகச் சொல்லப்படும் சில கம்பெனிகளின் வண்டவாளங்களைப் பார்க்கலாம்.

முதலில் ஸ்வான் என்னும் கம்பெனிக்கு 13 வட்டாரங்களுக்குரிய ஸ்பெக்ட்ரம் பங்குகள் 1537 கோடி ரூபாய்களுக்கு விற்கப் பட்டிருக்கின்றன என்கின்றன தகவல்கள்.  அந்த ஸ்வான் நிறுவனமோ தன்னை ஒரு கட்டிட நிறுவனமாக பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அனில் அம்பானி வசம் இருந்த இந்த நிறுவனத்தை இன்னொருவர் மூலமாக வாங்கி, இந்த ஸ்பெக்ட்ரத்தை வெறும் 1537 கோடி ரூபாய்களுக்கு முதலில் அரசிடம் இருந்து இந்தக் கம்பனியார் வாங்குகிறார்கள். வாங்கிய கையோடு எலிஸாட் என்றொரு மத்திய கிழக்கு நிறுவனம் ஒன்றிற்கு 4500 கோடி ரூபாய்க்கு 100% மேல் லாபம் வைத்து விற்கிறார்கள். பின்னர் அந்தக் கம்பெனியோ வேறு ஒரு நிறுவனத்திற்கு இன்னும் அதிக விலைக்கு வாங்கிய பங்குகளை விற்கிறது!

இதைப் போலவே இன்னும் சில வட்டாரங்களுக்கான உரிமை யுனிடெக் என்றொரு மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு  விற்கப் பட்டிருக்கிறது. அந்த நிறுவனமோ அரசிடம் இருந்து 22 வட்டாரங்களுக்கு 1651 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமையை டெல்நார் எனப்படும் நார்வே கம்பெனி ஒன்றிற்கு 6120 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கிறது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன.

இந்த பரிவர்த்தனையில் கிடைத்த கொள்ளை லாபம் பல்வேறு இடைத்தரகு கம்பெனிகள் மூலமாக கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்றப் பட்டிருக்கின்றது.

அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன.

இந்தத் தகவல்களின் சாரம் என்ன ?
நீங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறீர்கள். அதற்கு மத்திய அரசு உடந்தையாகவோ அல்லது மறைமுக கூட்டாளியாகவோ இருந்திருக்கிறது.
நம் சொந்தப் பணம் நூறு ரூபாய்கள் பிக்பாக்கெட் அடிக்கப் பட்டால் கூட கிடந்து பதறும் பொதுஜனம், திருடியவனைப் பிடிக்கத் துடிக்கும் பொது மக்கள், தங்கள் பொதுப்பணம் 1 லட்சம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப் பட்டிருந்தும் கொஞ்சம் கூட சுய பிரக்ஞை இன்றி , சுய உணர்வு இன்றி, கவலை இன்றி, விழிப்புணர்வு இன்றி கொள்ளையடிக்கும் அதே அரசியல்வாதிகளைத் துதி பாடி, புகழ்ந்து, பாராட்டித் திரிகிறார்கள்.

இப்படி ஒரு நாட்டின் மக்கள் இருந்தால் அந்த நாடு எங்கனம் உருப்படும்?

3. 2ஜி குறைந்த விலைக்கு விற்கப் பட்டிருக்கிறது என்பது எப்படி உறுதியாகத் தெரியும்?
இப்பொழுது 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்காக முறையான ஏலம் நடந்து வருகிறது. கோர்ட், மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பினால் ராஜாவின் விருப்பத்தை மீறி இந்த 3ஜி ஏலம் வேறு ஒரு மந்திரி குழுவின் தலைமையில் நடந்து வருகிறது. அதன் விற்பனை நிலவரத்தின் படி 2 ஜி விற்பனை அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டிருப்பது உறுதிப் பட்டு விட்டது.

சந்தை நிலவரப்படி அரசாங்கமே நேரடியாக உண்மையான தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டால், 1000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட 2ஜி அலைவரிசைக்கு ஈடான 3ஜி அலைவரிசையை கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கலாம் என்பதைத்தான் தற்பொழுது நடை பெறும் 3 ஜி ஏலம் உறுதிப் படுத்துகிறது.

அதன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

2ஜி மோசடி விற்பனைக்கும் 3 ஜி ஏல விற்பனைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும். தனது பினாமி கம்பெனிகளுக்கு ஆ.ராஜா விற்ற விலைக்கும் தற்பொழுது சந்தை நிலவரப் படி முறையான ஏலத்தில் போகும் விலைக்கும் உள்ள வித்தியாசத்தைக்  காணலாம்.

(இது ஒரு சாம்பிள் மட்டுமே.  மொத்தப் பட்டியல் அல்ல. அதனால் கூட்டினால் லாபக் கணக்கு 1 லட்சம் கோடி.)

No comments:

Post a Comment