ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Thursday, November 4, 2010

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு நாள்

சமீபத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் நிமித்தம், திருச்சிராப்பள்ளி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போதே தேனடை போல புரோக்கர்கள், "என்ன சார் ஃப்ரெஷ்ஷா, ரினிவலா, ஈசிஎன்ஆரா என்று கேட்டு அபிமன்யுவை வதம் செய்ய சூழ்ந்து கொண்ட கெளரவர்களைப் போல சக்ர வியூகம் அமைத்தார்கள்.". அவர்களைத் தவிர்த்து விட்டு ஏற்கனவே ஆன்லைனில் நிரப்பி வைத்திருந்த படிவத்துடன் ஹனுமன் வாலுடன் இணைந்து நின்றேன். அப்பொழுது அங்கு ஒருவர் மைக்கில் ஏதோ அறிவிப்பு செய்வதற்கு ஆயத்தமானார். அவர் அந்த அலுவலகத்தில் காவலாளி உத்யோகத்திற்காக ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோவினால் அனுப்பி வைக்கப்பட்ட காவலாளி என்பதை அவருடைய சீருடை உணர்த்தியது.



முதலில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தெளிவான தமிழில் தேர்ந்த மேடைப் பேச்சாளர் போல் பேசத் துவங்கினார். வரிசையாக முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய வந்திருப்பவர்கள், புதுப்பிப்பவர்கள், தொலைந்தவற்றிற்கு மாற்று பெற வந்திருப்பவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக படிவம் நிரப்புவது எப்படி என்றும், அதில் செய்ய வேண்டியவை, கூடாதவை என்னென்ன என்பனவற்றைத் தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கினார். இடையிடையே வித்யாசமாக பொன்மொழிகள், குழந்தைகளுக்கு நற்குணங்களை போதிக்க வேண்டியதன் அவசியம் என்பனவற்றையும் கூறி அசத்தினார்.

இத்தனைக்கும் இந்த நபர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உத்யோகஸ்தர் அல்ல. ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோ அனுப்பி வைத்திருக்கும் ஒரு காவலாளி. நான் பல இடங்களில் பார்த்த வரையில் இது போன்ற காவலாளிகள் கடனே ஒன்று ஒரு நாற்காலியில் அமர்ந்து பீடியோ, சிகரெட்டோ புகைத்த வண்ணம், சுவற்றிற்கு செங்காவி அடித்துக் கொண்டிருப்பர். இவரோ தனது செயல்பாடுகளால் மற்றவர்களிடமிருந்து நிரம்பவே வித்யாசத்தைக் காட்டினார். இவரது பேச்சின் ஹைலைட்டாக ஒரு விஷயம் கூறினார். " மேலே காத்திருக்கையில் உங்களுடைய உடைமைகளை நீங்கள் தெரியாமல் தவற விடலாம்; அவற்றை பொறுப்புணர்ந்து உங்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்; ஆனால் என்னைப் போன்ற சில தீய எண்ணம் கொண்டவர்கள் உங்களது பொருட்களைக் களவாடிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே உங்களது உடைமைகளை கூடிய மட்டும் என்னைப் போன்ற திருடர்கள் வசம் ஏமாந்து விடாதீர்கள் என்று அதில் "என்னைப் போன்ற" என்ற வார்த்தையை அழுத்திக் கூறிவிட்டு, மற்றவர்களைக் குறை காண்பதைக் காட்டிலும், என்னையே சொல்லிக் கொள்வதால் எனக்கும் பிரச்சனை ஏற்படாது என அதற்கு விளக்கம் வேறு கொடுத்தார்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிகுந்த பொறுமையுடனும், சிரத்தையுடனும் பாஸ்போர்ட் பெறுவதற்குண்டான அடிப்படை வழிகளை எளிமையான தமிழில் விளக்கிவிட்டு, இடையிடையே, முகவர்களிடம் உங்களது பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். யாருடைய சிபாரிசின் பேரிலும் இங்கு குறித்தகாலத்தை விடக் குறைவான காலத்தில் பாஸ்போர்ட் அளிக்கப்பட மாட்டாது, ஏமாறாதீர்கள்; ஏமாறாதீர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார். அங்கேயே அவரைச் சுற்றி நின்ற முகவர்கள் கூட இதைப் பெரிது படுத்தாமல் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். தவிர போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்ற முனைவதால் விளையும் சங்கடங்களையும் எடுத்துக் கூறினார்.

கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தையுடன் கூடிய தாய்மார்கள் போன்றோர்களுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் என்றுமே நல்லொழுக்கம் என்ற நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டால்தான், அவர்களுடைய எதிர்காலத்தை மிகச் சிறப்பானதாக அறுவடை செய்ய இயலும். எனவே அவர்களுக்கு நல்ல ஒழுக்கங்களையும், பழக்கவழக்கங்களையும் போதியுங்கள் என்று கூறிவிட்டு, அனைவரும் பொறுமையுடனும் இன்முகத்துடனும் எல்லோருடனும் பழகுங்கள்; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்; ஆனால் அக்கறையுடன் செயல்பட்டால் எக்கரையும் பச்சைதான் என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

அரசாங்க சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி, இவை தவிர இதர படிகள், ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன், பணிக் காலத்தில் இடையிடையே ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் என அனைத்தையும் பெற்றுக் கொண்டும் கூட, கடமைக்காக லஞ்சம் கேட்கும் லஞ்சப் பேய்கள் மத்தியில், இவரைப் போன்ற கடமையுணர்வு மிகுந்த உன்னத ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வெகு சமீபத்தில் திரு கடுகு அவர்களுடைய வலைமனையில் கூட அவர் தான் அமெரிக்காவில் கண்ட பள்ளி வாகன ஓட்டுனர் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும் இவருடைய நினைவுதான் வந்தது. இவரைப் போன்ற ஒரு நபர் ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் இருந்துவிட்டால் என்ற பேராசைக் கனவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது நாசூக்காக மறுத்து விட்டார். சென்ற வேலை இனிதே முடிந்த திருப்தியுடனும், அவரின் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளாத என்னுடைய மறதியையும் நொந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

- யதிராஜ்

No comments:

Post a Comment