ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Wednesday, November 10, 2010

ஒபாமாவின் இந்திய வருகை : பலன் யாருக்கு?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 3 நாட்கள் மேற்கொண்ட இந்தியப் பயணத்தால் இரு நாடுகளுக்கும் கிடைத்த பலன் என்ன? என்பதை சீர்தூக்கிப் பார்த்து மதிப்பீடு செய்வது அவசியமாகும். திங்கட்கிழமை இந்திய பார்லிமெண்டின் இரண்டு அவைகளின் சிறப்புக் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஒபாமா உரையாற்றினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை என்று ஊடகங்களால் புகழப்படுகிறது. ஆனால் உரைகளால் வரலாறோ அல்லது எதிர்காலமோ படைக்கப்பட்டதாக வரலாறு ஏதுமில்லை. அந்த உரையில் இந்தியாவின் வரலாறும், தலைவர்களும், மக்களும் புகழப்பட்டனர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன்றைய உலக சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது, உலகில் இந்தியா அதற்குரிய இடத்தைப் பெற்றுவிட்டது என்றெல்லாம் பலத்த கரவொலிக்கு இடையே ஒபாமா பேசினார். ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் இந்தியா இடம்பெற, ‘அதற்குரிய காலம் வரும்போது’ என்ற பொடியுடன், அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றார். இந்த ‘உத்தரவாதம்’ கூட்டறிக்கையிலும் பிரதிபலித்தது. அமெரிக்காவின் புதைசேறாகிவரும் ஆப்கானிஸ்தான், சீன பிரச்சனைகளில் இந்தியாவிற்கு கூடுதல் இடமளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் என்னவென்று விளக்கப்படவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை கருத்தில் கொண்டு, அணு சக்தி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப உதவிகள் செய்யப்படும் என்று மற்றொரு உறுதிமொழி. ஆனால், உயர் தொழில்நுட்ப உதவியளித்தால் மட்டுமே அணு சக்தி ஒத்துழைப்பு என்பது அந்தப் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவால் நிபந்தனையாக்கப்பட்டது. மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் செயல்ப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும என்றார். இது பல முறை அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர்களால் சொல்லப்பட்ட இராஜ தந்திர வார்த்தைகளே, ஒன்றும் புதிதல்ல. 
அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் ஒப்பந்தங்கள் : எனவே, இந்தியாவில் ஒபாமா மேற்கொண்ட 3 நாள் பயணத்தில் அமெரிக்காவிற்கு கிடைத்ததென்ன, இந்தியா பெற்றதென்ன? என்பதை மதிப்பீடு செய்துப் பார்த்தால், அவரது பயணம் அமெரிக்காவிற்கும், அதன் பொருளாதாரத்திற்கும், அந்நாட்டு பெரு நிறுவனங்களுக்கும் போதுமான பயனளித்துள்ளது. 

1. இந்திய விமானப் படைக்கு நீண்ட தூரம் டாங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைக் கொண்டு செல்லக் கூடிய அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான சி-17 விமானங்கள் 10ஐ வாங்குவதென்ற 4.1 பில்லியன் ஒப்பந்தம். இதன் மூலம் அமெரிக்காவில் 22,000 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் 6 பிறகு வாங்குவோம் என்று இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி கூறியுள்ளார். 

2. போயிங் நிறுவனத்தின் பயணிகள் போக்குவரத்து விமானமான பி 737-800 வகை விமானங்கள் 30ஐ வாங்க இந்திய தனியார் விமான .நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் ஒப்பந்தம். 

3. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடமிருந்து நமது நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் இலகு ரக விமானத்திற்கு 107 எஃப்-414 இயந்திரங்கள் வாங்க ஒப்பந்தம். மதிப்பு 1 பில்லியன் டாலர். 

4. ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ள அனல் மின் நிலையங்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து 6 எரிவாயு டர்பைன்கள் வாங்க ஒப்பந்தம். இதுமட்டுமின்றி, 5 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அமெரிக்காவின் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற ரிலையன்ஸ் ஒப்பந்தம். 

5. இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் வெஸ்டிங் ஹெவுஸ், ஜெனரல் எலக்டிரிக் ஆகிய நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளைப் பெற ‘தடையாகவுள்ள’ அணு விபத்து இழப்பீடு சட்டத்திலுள்ள விதிமுறைகளை முறைபடுத்த ஒப்புதல். 

இதுமட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்கள் எதிர்பார்த்த மேலும் பல சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. அதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் பி.ஜே. கிராவ்லி வாஷிங்டனில் பத்திரிகையாளர்களிடம் தெளிவாகவே விளக்கியுள்ளார். “அதிபர் ஒபாமாவின் 3 நாள் இந்தியப் பயணம் அமெரிக்கா எதிர்பார்த்த அனைத்தையும் சாதித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
இந்தியா பெற்றதென்ன? : இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து தனியார் பங்கேற்புடன் 10 பில்லியன் டாலர் தொகையுடன் உருவாக்க ஒப்புக்கொண்டுள்ள உள்கட்டமைப்பு நிதித் தொகுப்பு (இன்பராஸ்ட்ரெக்சர் டெபிட் பண்ட்), இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய ‘நீடித்த பசுமைப் புரட்சி’ (இது நமது விவசாயத்தை எந்த அளவிற்கு நோகடிக்கப் போகிறது என்பது போகப் போகத் தெரியும்), டில்லியில் நோய் கண்டுபிடிப்பு மையம், எரிசக்தி (அணு சக்தி என்று புரிந்துகொள்க) ஒத்துழைப்பு ஆகியன. இந்தியப் பயணத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களால் அமெரிக்காவில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்று வந்துள்ளேன் என்று அமெரிக்கா திரும்பியதும் கூறப்போகிறேன் என்று ஒபாமா பேசியுள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களாக இந்திய தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட பல தொழில் வல்லுனர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றிட அளிக்கப்படும் ஹெச்1பி, எல்1, எல்2 உள்ளிட்ட விசா கட்டணங்களை 2,000 முதல் 2,500 டாலர்கள் வரை உயர்த்தியது குறித்து பேச்சு மூச்சில்லை. 

பிசினஸ் புராசஸ் அவுட்சோர்சிங்சிற்கு (பிபீஓ) ஒஹியோ மாகாணம் விதித்துள்ள தடை, அதனை ஆதரித்து அமெரிக்க காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் தான் பேசியது, அப்படிப்பட்ட தடையால் (தற்காப்புக் கொள்கையால்) இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியன பற்றி ஒபாமாவும் பேசவில்லை, இந்தியப் பிரதமர் பேசியதாகவும் தெரியவில்லை. “பிசினஸ் புராசஸ் அவுட்சோர்சிங் பணிகளைப் பெற்றதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள்தான் பலன் பெற்றன என்றும், அமெரிக்கர்களுக்குரிய வேலை வாய்ப்புகளை நாங்கள் திருடவில்லை” என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். ஆனால் அதற்கான பதில் ஒபாமாவிடமிருந்து வரவில்லை. 

ஹெச்1பி விசா பெற்றுச் சென்றவர்கள், அங்கு பெறும் ஊதியத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக செய்யப்படும் பிடித்தத்தைத் திரும்பப் பெற அமெரிக்காவுடன் ஊதியப் பிடித்தம் தவிர்ப்பு ஒப்பந்தம் போடப்படும் என்று கடந்த செப்டம்பரில் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா பேசினார். ஆனால் அதுபற்றி ஒபாமா பயணத்தில் ஏதும் பேசப்பட்டதாக ஒரு குறிப்பும் இல்லை. இதற்குமேல் பேச வேண்டும் என்று மட்டும் நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல் வற்புறுத்தியுள்ளார். 

அதுமட்டுமல்ல, மிகச் சமீபமாக அமெரிக்காவிற்கு பணி நிமித்தம் விசா பெறச் செல்லும் இந்தியா தொழில்வல்லுனர்களிடம், அமெரிக்க தூதரகத்தின் விசா அதிகாரிகள் மிகக் கடுமையாக (கொடுமையாக) நடந்துகொள்கிறார்கள் என்று புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து அமெரிக்காவிற்கு சென்ற பலர், கடுமையான விசாரணைக்குப் பிறகு, அடுத்த விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதுபற்றியெல்லாம் ஏதும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.ஆனால் பராக் ஒபாமா, அரசுகளைத் தாண்டி, மக்களுக்கு இடையிலான உறவு பற்றி இங்கு பேசுகிறார். எனவே ஆழமாக நோக்கின், ஒபாமாவின் இந்தப் பயணம் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளைப் பற்றியதாக இருந்ததே தவிர, அது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு சமமான பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்தியதாகத் தெரியவில்லை. 

டில்லியில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு (பிக்கி) ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய இந்திய தொழில் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா, “பராக் ஒபாமா பயணம் அளித்த துவக்கத்தை கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, சேவைகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (காம்ப்ரிஹென்சிவ் எகனாமிக் பார்ட்னர்ஷிப் அக்ரிமெண்ட்) உருவாக்குவது குறித்து விவாதிக்க வேண்டும்” என்று உற்சாகமாக பேசியுள்ளார். ஆனால் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் செயலர் காரி லோக், “நாம் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து செயலாற்றி வருகிறோம். ஒவ்வொரு படியாகத்தான் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவைகளின் மீது வணிக சமூகங்கள் (பெரு நிறுவனங்கள்) கவனம் செலுத்தி வருகின்றன. எனவே, ஒவ்வொரு அடியாக முன்னெடுக்கலாம்” என்று உற்சாகமின்றி பேசியதாக செய்திகள் கூறுகின்றன. 

இவை யாவும் இந்தியாவை அமெரிக்க அரசும், அதன் பெரு நிறுவனங்களும் எவ்வாறு பார்க்கின்றன என்பதையே தெளிவுபடுத்துகின்றன. அவைகளுக்கு இந்தியா ஒரு பெரும் சந்தை. அந்த சந்தையில் அமெரிக்காவின் உற்பத்திகளுக்கு தடையேதும் இருக்கக் கூடாது. குறிப்பாக அமெரிகாவின் விவசாய விளைபொருட்களுக்கு பெரும் சந்தையாக இந்தியாவை அந்நாடு பார்க்கிறது. அதனால்தான் தோகா சுற்றுப் பேச்சு குறித்து கூட ஒபாமா பார்லிமெண்ட் உரையில் குறிப்பிட்டார். அது அவர்களின் பொருட்களுக்கு பெரும் தடையை ஏற்படுத்துகிறது. 

தோகா சுற்றுப் பேச்சுவார்த்தை அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுக்கும், இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்க உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பிரச்சனை தொடர்பானதாகும். தங்களுடைய உற்பத்திகளுக்கு வளரும் நாடுகள் சந்தையை திறக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகள் எதிர்பார்க்கி்ன்றன. அதில் சம அளவிலான போட்டியிருக்க வேண்டும், எனவே உங்கள் நாட்டு விளைபொருட்களுக்கு நீங்கள் அளிக்கிற மானியங்களை குறையுங்கள் என்கின்றன இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள். இதுதான் அமெரிக்காவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்த நெருக்கடியில் இருந்து விடுபட உலக வர்த்தக அமைப்பில் தீர்வு காண்பதற்கு பதிலாக, இந்தியாவுடன் தனித்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது அமெரிக்கா. 

ஆக, அமெரிக்காவின் (தங்கள் நாட்டின் உற்பத்திகளுக்கு) சந்தை தேடும் வணிகப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏதுமில்லை. அதிபர்தான் மாறினாரே தவிர, அந்நாட்டின் அணுகுமுறை மாறவில்லை. இந்த ஒருபக்க ஆதாய அணுகுமறை மாறாதவரை, இந்தியா போன்றதொரு வளரும் நாட்டுடன் அந்நாடு நீடித்த பொருளாதார உறவு கொள்ள முடியாது.

No comments:

Post a Comment