ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Thursday, April 7, 2011

Issued in Public Interest


அண்ணா ஹஸாரே

விளையாட்டு முதல் விஞ்ஞானம் வரை ஊழல் தலைவிரி கோலமாக ஆடும் தேசமாக பாரதம் மாறி வருகிறது. ஊழலுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பிலிருக்கும் அரசாங்கமும், அதன் தலைமையும், அது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது என அப்பாவி வேஷம் போட்டு வருகிறது. ஆனால் மேடைகள் தோறும், ஊழலை ஒழித்தாலொழிய எங்கள் அரசாங்கத்தின் ஜென்மம் சாபல்யம் பெறாது என்ற ரீதியில் அரசாங்கத்தை ஆட்டுவிப்பவர்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் முதுபெறும் சமூக சேவகரான அன்னா ஹஸாரே, ஜன் லோக்பால் என்ற ஊழலுக்கெதிரான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென தில்லியின் ஜந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணா நோன்பு துவங்கியுள்ளார். இதற்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, சீர்திருத்தவாதியான ஸ்வாமி அக்னிவேஷ் மற்றும் மகஸேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே போன்றோர்கள் ஆதரவளித்து, உண்ணா நோன்பில் பங்கேற்றுள்ளனர். மேலும் பொதுமக்களுடைய பெருவாரியான ஆதரவும், மீடியா கவனமும் பெற்று இந்த உண்ணா விரதம் அரசாங்கத்தின் கவனத்தைக் கலைத்துள்ளது.



ஜன் லோக்பால்:

ஜன் லோக்பால் என்ற இந்த மசோதாவின் சூத்ரதாரி கர்நாடகத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் லோகாயுக்தா அமைப்பின் நிறுவனரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ப்ரசாந்த் பூஷன் போன்றோர் ஆவர். இம்மசோதாவின் நோக்கம், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் ஊழல் புகார்களை உடனுக்குடன் (ஒரு வருடத்தில்) விசாரித்து முடித்து, சம்பத்தப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கித் தருவது, ஊழலின் மூலம் ஈட்டிய சொத்துக்களை முடக்குவது, போன்றவை ஆகும். தவிர, ஊழலில் ஈடுபட்டவர் மந்திரியாகவோ அல்லது முக்கிய அரசாங்க அதிகாரியாகவோ இருப்பின், அவர் மீது வழக்குத் தொடர அரசாங்க அனுமதி தேவையில்லை என்பதுவும் இம்மசோதாவின் முக்கிய அம்சமாகும். இம்மசோதாவை பாராளுமன்றத்தில் ஏற்று நிறைவேற்ற வேண்டுமென்பதுதான் இப்போதைய அன்னா ஹஸாரே தலைமையிலான உண்ணா நோன்பிருப்பவர்களின் முக்கியக் கோரிக்கை.

ஊழலுக்கெதிராகப் பிறப்பெடுத்துள்ள தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே ஊழலை ஒழிக்க லோக்பால் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் கொணர்ந்து நிறைவேற்றியும் உள்ளது. ஆனால் அதிலுள்ள ஓட்டைகளின் காரணமாக அது செயல்படுத்த முடியாத ஒரு சட்டம் என்பது அதை எதிர்க்கும் ஹஸாரே போன்றோர் கூறும் காரணம்.

அரசாங்கத்தில் லோக்பால் மசோதா மூலம் ஒரு மந்திரியோ அல்லது அரசாங்க அதிகாரி தொடர்புடைய ஊழலையோ வெளிக் கொணர்ந்து, விசாரித்து தண்டனை பெற்றுத் தர வேண்டுமானால், பொதுமக்கள் முதலில் லோக்சபா அல்லது ராஜ்யசபாவின் சபாநாயகரிடம் ஊழல் தொடர்பான புகார் மனுவை அளிக்க வேண்டும். சபாநாயகர் அம்மனுவைப் பரிசீலித்து, அது ஏற்புடையது என்றால் லோக்பால் கமிட்டிக்கு அனுப்புவார். பின்பு அது விசாரிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்படும்(???). இயல்பாகவே சபாநாயகர் ஆளுங்கட்சியையோ அல்லது கூட்டணியையோ சார்ந்த நபராக இருப்பதால், ஆளுங்கட்சி அல்லது அதற்கு வேண்டிய அதிகாரி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு சபாநாயகர் எடுத்துக் கொள்வது சந்தேகமே. அதற்கு மீறி கமிட்டிக்கு அனுப்பப்பட்டாலும் விசாரணை ஆண்டுகள் கணக்கில் எடுத்து, மறக்கப்பட்டு, பொதுமக்களின் பணமும் விசாரணை என்ற பெயரால் வீணடிக்கப்படும். எனவே அந்த லோக்பால் சட்டம் ஏற்புடையதல்ல என்பதே ஹஸாரே மற்றும் குழுவினரின் வாதம்.

ஜன் லோக்பால் மசோதாவின் அம்சங்கள்:

* மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா அமைப்பும் நிறுவப்படும்.

* உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்காது.

* மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.

* ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை தண்டனைக்காலத்தில் மீட்கப்படும்.

* பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக் கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும்.

* ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி தண்டனை பெறுவார்.

* லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள். நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம் இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள் தவிர்க்கப்படும்.

* ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படுவர்.

* புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

மேற்கண்ட எந்தவொரு அம்சமும் அரசாங்கத்தின் தற்போதைய லோக்பால் மசோதாவில் இல்லை. இது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கொண்ட நோக்கில் பழுதின்றி செயல்பட்டால், நிச்சயம் இந்தியா ஊழலற்ற தேசமாக மாறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தவிர, லோகாயுக்தா அமைப்பு கர்நாடக அமைச்சர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதால், இவ்வமைப்பு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து என்பதிலும் ஐயமில்லை. ஆக இந்தியர்கள் உலகக் கோப்பை வெற்றியை ஒற்றுமையோடு வரவேற்றுக் கொண்டாடியதைப் போல், ஹஸாரேவின் உண்ணா நோன்பிற்கும் ஆதரவளித்து, அவரது உயர்ந்த நோக்கம் ஈடேற ஆதரவளிப்போம்.
லோக்பால் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. பேசாமல் லோக்பால் என்பதை கிரிக்கெட் பால் என்று வைத்தால் பலரும் பேசுவார்கள் என்று நம்புகிறேன். அண்ணா ஹஸாரே முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். வெற்று பெற்றால் இவர் தான் பாரத ரத்தனா!

No comments:

Post a Comment